தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தந்தை பெரியார் உள்பட பல்வேறு தலைவர்களின் சிலைகளை உடைப்பது, அவமரியாதை செய்வது என்பது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் தலைவர்கள் சிலைகளை பாதுகாக்க இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். தற்போது தஞ்சையில் எம்.ஜி.ஆர் சிலை உடைத்துள்ள சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை வடக்கு வீதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த மார்பளவுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அவரது பிறந்த நாள், நினைவு நாட்கள் உள்பட முக்கிய தினங்களில் கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று (25/01/2022) காலை அந்த வழியாகச் சென்றவர்கள் சிலையை பார்த்த போது எம்.ஜி.ஆர் சிலையை காணவில்லை. இந்த தகவல் வேகமாக பரவியதால் அ.தி.மு.க. நிர்வாகிகள் கரந்தை அறிவுடைநம்பி உள்பட பலர் திரண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடைக்கப்பட்ட சிலை பீடத்தின் பின்பக்கம் கிடந்துள்ளது. அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்த ர ர க்கள் எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் வடக்கு வாசலைச் சேர்ந்த சேகர் சிலையைச் சேதப்படுத்தியது சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சேகர் என்பவரை கைது செய்துள்ள காவல்துறை, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.