"குடிமராமத்து என்கிற பெயரில் டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளையும்,குளங்களையும் ஆளும் கட்சியினர் மணல் குவாரியாக மாற்றி கொள்ளை அடித்துக்கொண்டிருக்கின்றனர்" என்கிற குமுரல் விவசாயிகள் மத்தியில் எதிரொலிக்கிறது. அந்த கூக்குரல் தஞ்சை மாவட்டத்தில் பெரிதாகவே கேட்கிறது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகள்,குளங்கள் மற்றும் கால்வாய்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற சிறுவகை களிமண்களை விவசாய பயன்பாட்டிற்காகவும் வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்காகவும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1951 ஏரிகள் குளங்கள் கால்வாய்களில் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த ஏரிகளில் குடி மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து திருவிடைமருதூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் என்னவோ அற்புதமானவை தான். ஆனால், அதிகாரிகள் கமிசன் வாங்குவதில் அரசியல்வாதிகளையே மிஞ்சிவிட்டனர். குடிமராமத்து திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்தார். அப்போது அதிமுகவினரின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்பதை வெளிப்படையாக விவசாய சங்கங்களும், அரசு அதிகாரிகளும் குமுறினர். இதனை கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆண்டுக்கான நிதியை ஒதுக்கி இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது குறிப்பாக அதிமுகவினரின் தலையீடு இருக்கவே கூடாது என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள ஒன்றிய செயலாளர்கள் மூலம், ஒவ்வொரு கிளையிலும் உள்ள அதிமுக கிளை செயலாளர்களுக்கே கொடுக்கப்பட்டு குளங்கள் முழுவதும் மணல் குவாரியாக மாறியிருக்கிறது.
குடி மராமத்து பணியின் கீழ் ஒரு குளத்திற்கு 90 ஆயிரம் ரூபாயை அரசு கொடுக்கும், 10 ஆயிரம் ரூபாயை அங்குள்ள விவசாயிகள் சொந்த நிதியோ உடல் உழைப்போ, டிராக்டர்கள் மூலமாக கொடுத்து ஒரு லட்சம் ரூபாய்க்கு தூர்வார வேண்டும். ஆனால் விவசாயிகள் என்கிற பெயரில் அதிமுகவினர், காரைக்கால், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் மணல் மாபியாக்களை கொண்டு வந்து லாரிகள் மூலம் மணல் கடத்தல் பணியை, இரவு பகல் பாராமல் செய்து வருகின்றன. ஒரு லாரி மணல் 7 ஆயிரத்திலிருந்து 15,000 வரையும், டிராக்டர் 3500 ரூபாயில் இருந்து ஐந்தாயிறம் வரையும் விற்கின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள், காவல்துறை, அதிமுகவினர் வரை கமிசன் நீண்டு கிடக்கிறது. தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருமே இதில் பர்சண்டேஜ் முறையில் பணம் போகிறது என்று அங்குள்ள பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக திருவிடைமருதூர் தொகுதியில் இருக்கும் குளங்கள் முழுவதும் மணல், மணல் மாபியாக்களின் கைகளுக்கு சென்று மணல் குவாரிகளாகவே செயல்படுகிறது. மணல் மாஃபியாக்களோ மணலை அள்ளிக் கொள்வதற்கு குளம் இருக்கும் ஊரில் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். அதன்படி ஊருக்கு ஒவ்வொரு அமோண்ட், அந்த ஊரில் இருக்கும் திமுக கிளை செயலாளருக்கு ஒரு அமோண்ட் என கொடுத்து கனிம வளங்களை மொத்தமாக கொள்ளையடித்து வருகின்றனர். இதனை தமிழக முதல்வர் பழனிசாமி கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்கிறார் ஆதங்கத்துடன் .
இதுகுறித்து திருவிடைமருதூர் தாசில்தாரிடம் கேட்டோம், அவர் செய்தியை கேட்டவர் லைன் கிடைக்கவில்லை என கட் செய்தார், வாட்சப் மூலம் மணல் கடத்தல் செய்தியை புகைப்படத்துடன் அனுப்பினோம், பார்த்தவர் எதுவும் பேசவில்லை. அதிகாரிகளே சம்பளத்திற்கு வேலை பார்க்காமல் கையூட்டு வாங்கும் பணத்திற்காக வேலை பார்த்தால் நிலைமை என்ன ஆகும்.