திருவாரூரில் குளம் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்திய ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து பொதுமக்கள் திரண்டுவந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 4- ஆவது வார்டில் உள்ள தாமாரகுளத்தைத் தூர்வாரும் பணி நடைபெற்று வந்த நிலையில், அடியக்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி தடுத்து நிறுத்தியிருக்கிறார். 1,000- க்கும் மேற்பட்டோர் முக்கிய நீர் ஆதாரமாக பயன்படுத்தி வரும் அந்தக் குளத்தை உடனடியாக தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தை அக்கிராம மக்கள் 200- க்கும் மேற்பட்டோர் முகக் கவசம் அணிந்து முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின்போது ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்துக் கோஷங்களை எழுப்பினர். குளத்தைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.