
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையைச் சேர்ந்த முதுபெரும் திராவிட இயக்கத் தொண்டரும் தி.மு.க.பிரமுகருமான கோ.வீ.ஜெயராமன், எழுதிய ‘ஒரு தொண்டனின் தூய பயணம்’ என்னும் அரசியல் அனுபவக் கட்டுரை நூலின் வெளியீட்டு விழா, திருமக்கோட்டையில் நடைபெற்றது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். தொடங்கி, மன்னார்குடிப் பகுதியில் கோலோச்சிய முன்னாள் அமைச்சர் மன்னை ப.நாராயணசாமி வரையிலான திராவிட இயக்க முன்னோடிகள் பலருடனும் தான் நடத்திய அரசியல் பயணத்தை, கோ.வீ.ஜெயராமன் இந்த நூலில் சித்தரித்திருக்கிறார்.

வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களை கோட்டூர் தி.மு.க. ஒ.செ. தேவதாஸ் வரவேற்க, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆடலரசன் முன்னிலையில், தி.மு.க. மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் தலைமையில், நூலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் வெளியிட்டார். நூலின் முதல்படியை மன்னார்குடி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பெற்றுக்கொண்டார்.

விழாவில் தி.மு.க. பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு கோ.வீ.ஜெயராமனுக்குப் பாராட்டையும் வாழ்த்துக்களையும் உற்சாகமாய்த் தெரிவித்தனர். திருமக்கோட்டை ஏ.கோவிந்தராஜ் நன்றியுரை ஆற்றினார்.
ஒரு முதுபெரும் தி.மு.க. தொண்டரின் உழைப்புக்கு மகுடம் சூட்டிய நிகழ்ச்சி இது.
- இலக்கியன்