திருவாரூர் அருகே பள்ளியில் ஒற்றை குரங்கின் சேட்டை மாணவர்களை பாடாய்படுத்தி வருவதால், மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் அரசு உயர்நிலைப்பள்ளியில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளிக்கு அருகிலேயே அரசு நடுநிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் சுற்றி வந்த, ஒற்றை குரங்கானது பள்ளி வகுப்பறையில் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வதாகவும், மாணவர்களின் உணவு நேரத்தில் வந்து பிடிங்குவதோடு பயமுறுத்துவதாகவும், கொடுக்காத மாணவர்களை துரத்துவதாகவும், இருந்த நிலையில், அதனை விரட்ட முயற்சி செய்த பெண் ஆசிரியரை கடித்து குதறிவிட்டதாகவும் கலக்கத்தோடு தெரிவிக்கின்றனர். அதோடு உயர்நிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் தாவியிருந்த குரங்கு அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், "தொடர் மழை காரணமாக பிள்ளைகளின் படிப்புகள் ஒருபுறம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த குரங்கின் அட்டகாசத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறை உதவியுடன் குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்," என்றனர்.