திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பிரபாகரன் என்பவர் திடிரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாராந்திர குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் இன்று நடைபெற்று வந்தது . அப்போது மனு அளிக்க வந்தவர்களில் ஒருவரான நீடாமங்கலம் தாலுக்கா, வடபாதிமங்கலம் அருகே உள்ள வேற்குடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் திடிரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக அவரது கையில் இருந்த விஷபாட்டிலை பிடுங்கியதோடு, அவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற பிரபாகரனுக்கு சொந்தமிழ்செல்வி (26) என்கிற மனைவியும், குகன்ஷா (1) என்கிற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு கஜா புயலின்போது சேதமடைந்த தனது வீட்டை சீரமைக்க விடாமல் அருகில் வசிக்கும் சிலர் தடுப்பதாகவும், இதனால் கடந்த ஒரண்டாக தனது மனைவி குழந்தையுடன் மாட்டு கொட்டைகையில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதுக்குறித்து காவல் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிகேட்டு மாவட்ட ஆட்சியரிடம் வந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.