கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா வரும் நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிலையில், திருவிழா தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பிறப்பித்திருக்கும் உத்தரவில், வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்று மலை ஏறுவதற்கும், கிரிவலம் செல்வதற்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட வீதிகளில் நடைபெறும் சுவாமி வீதி உலா, தேர்த்திருவிழா ஆகியவை இந்த ஆண்டும் நடைபெறாது எனத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், அதற்கு மாற்றாக ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என கூறியுள்ளார்.