பா.ஜ.க. மோடி அரசு ஆட்டுவிக்கும் ஆட்டத்திற்கெல்லாம் பா.ஜ.க.வின் பினாமியான எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆடுகிறது என்று அணைத்திந்திய இளைஞர் பெருமன்ற (AlYF) தமிழ்நாடு மாநில செயலாளர் மாநில செயலாளர் பாலமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு அடக்கு முறைமூலம் மக்களின் உரிமையை நசுக்கி விடலாம் என பகல் கனவு காண்கிறது. ஒவ்வொரு போராட்டமும் மக்களின் உரிமையை மீட்டுக் கொடுத்தே வந்துள்ளது மாணவர்கள், இளைஞர்களை போராட்ட களத்தில் தள்ளுவதே ஆளும் அரசுகள் தான்" என நம்மிடம் பேசிய அணைத்திந்திய இளைஞர் பெருமன்ற (AlYF) தமிழ்நாடு மாநில செயலாளர் மாநில செயலாளர் பாலமுருகன் கூறியுள்ளார்.
மேலும் "எங்கள் அமைப்பின் மாநில குழு முடிவின்படி சேலம் சென்னை எட்டு வழி சாலையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தை இழக்க நேரிடுகிறது. இயற்கை வளங்கள் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தை கொடுக்க மாட்டோம் என மக்கள் கதறுகிறார்கள். அரசு போலீசை விட்டு அடக்குகிறது. பன்னாட்டு நிறுவனத்திற்காக போடப்படும் இந்த எட்டு வழி சாலை மக்களுக்கு தேவையில்லை. ஆகவே இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் பலர் மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அதைப் போல அரசின் ஏதேச்சதிகாரப் போக்கை கண்டித்து போராடுபவர்கள் மீதும் அமைப்புகள் மீதும் சமூக நல ஆர்வலர்கள் மீதும் அடக்கு முறை சட்டங்களை ஏவுகிறது. இந்த அரசு எதிர்த்து பேசினாலே பயங்கரவாதி, தீவிரவாதி என்று முத்திரை குத்தி குண்டர் சட்டம், தேசவிரோத பாதுகாப்பு சட்டப்படி கைது செய்வது தொடர்கிறது.
இது கருத்துரிமை பேச்சுரிமை கொண்ட ஜனநாயக நாடு, ஆனால் தங்களை சர்வாதிகாரிகளாக நினைத்து ஆள்வோர்கள் செயல்படுகிறார்கள். மத்திய பா.ஜ.க. மோடி அரசு ஆட்டுவிக்கும் ஆட்டத்திற்கெல்லாம் பா.ஜ.க.வின் பினாமியான எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆடுகிறது. ஆகவே இந்த அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்ட போராட்டங்கள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 11ந் தேதி மிகப்பெரிய அளவில் இளைஞர் பெருமன்றம் நடத்துகிறது " என்றார்.