திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 1ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் காலை மற்றும் இரவில் வலம் வரும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் கண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி பெரியத்தேர் என்கிற மகாரதம் வீதியுலாவும், டிசம்பர் 10ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த தீபத்திருவிழா அன்று கிரிவலம் வரவும், மலையேறி அண்ணாமலையார் பாதத்தை காணவும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் 9 முதல் 12 தேதி வரை சென்னை, கும்பகோணம், திருச்சி, சேலம், தருமபுரி, ஒசூர், கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.