திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ளது கீழ்சிறுப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ் (35). பிரகாஷ்க்கு அனிதா என்ற மனைவியும், சந்தீப்கான்(2) குழந்தையும் உள்ளனர்.
பிரகாஷ், இருசக்கர வாகனங்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது தண்டராம்பட்டு, செங்கம், தானிப்பாடி காவல்நிலையங்களில் 9 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவர் திருந்தி வாழ்வதாக அக்கிராமத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் நவம்பர் 25ஆம் தேதி காலை நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த பிரகாஷ்சை, 10 பேர் கொண்ட கும்பல், அடித்து இழுத்து லாரியில் போட்டு அமுக்கிக்கொண்டு சென்றுள்ளது. மாலை 5 மணியளவில் அதே லாரியில் வந்த சிலர் பிரகாஷின் உடலை அவரது நிலத்திலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
தனது கணவரை காணவில்லை என்று கவலையில் இருந்த மனைவி, அவரது உடல் நிலத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார். இதையடுத்து சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தண்டராம்பட்டு காவல்நிலைய போலீஸார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுப்பாக்கத்துக்கு பக்கத்து கிராமமான மேல்செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரும், முன்னால் ஊராட்சி மன்றத் தலைவருமான வேலாயுதத்தின் மகன் வசந்தின் புல்லட் பைக் சில தினங்களுக்கு முன்பு காணமல் போனதும், அந்த பைக்கில் இருந்த ஜீ.பி.எஸ் கருவி பிரகாஷ் நிலத்தை காட்டியதால், வசந்த் ஆட்களை வைத்து பிரகாஷை கடத்திச் சென்றதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல், வசந்த் ஏவிய ஆட்கள் பிரகாஷை கடத்திச் சென்ற வீடியோ ஆதாரங்களையும், அடித்துக் கொன்றுவிட்டு லாரியில் வந்து உடலை நிலத்தில் வீசிய வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பிரகாஷின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருவண்ணாமலை டூ தண்டராம்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து சமாதானம் பேசியதால் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்று மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் தற்போது வரை அப்பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.
அடித்து கொலை செய்ததாக கூறப்படும் வசந்த் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது. கொலை முயற்சியில் தப்பிய திருவண்ணாமலையை சேர்ந்த திமுக இளைஞரணியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நாட்டுவெடி குண்டு வீசி வசந்த்தை கொலை செய்ய முயன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ் கொலையில் இதுவரை வசந்த் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.