திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற 15 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், நேற்று (மே 05- ஆம் தேதி) இரவு ஒருவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கரோனா உறுதியானது. இவரது மகன் டெல்லி சென்று வந்துள்ளார். அவருக்கு உடனடியாகப் பரிசோதனை செய்தபோது கரோனா இல்லை என்று முடிவுகள் வந்தது. இருப்பினும் அவரது குடும்பத்தினரைப் பரிசோதித்தபோது தாய்க்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த மாதம் 13- ஆம் தேதி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனை செய்ததில் (நான்காவது மற்றும் ஐந்தாவது பரிசோதனையில்) கரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை மே 06- ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மே 05- ஆம் தேதி நள்ளிரவு அந்தப் பெண் இறந்துள்ளார். தீவிர சிகிச்சைக்குச் செல்லாமலே அதுவும், குணமானதாக வீட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் பலியாகி இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடதக்கது.