தமிழகத்தில் பரப்பளவில் மிகப் பெரிய மாவட்டங்களில் முதல் இடத்தில் இருப்பது திருவண்ணாமலை மாவட்டம். இந்த மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகம். கரோனா பாதிப்பு மாவட்டங்களில் முதல் 5 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று.
இந்த மாவட்டத்தில் 2021 ஜனவரி 14 ஆம் தேதி கணக்குப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 19272 நபர்கள். இதில் 283 நபர்கள் இறந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 63 நபர்கள் உள்ளனர், மற்றவர்கள் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள மாவட்டங்களை விட மிக அதிகம். இதனாலேயே மத்திய சுகாதாரத்துறை சில மாதங்களுக்கு முன்பு கரோனா பரவல் ஆய்வை சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தியது. இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு குறைந்த அளவில் தடுப்பூசி மருந்துகளை ஒதுக்கியுள்ளது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்துள்ளது மாநில சுகாதாரத்துறை. இதில் வேலூர் மண்டலத்தோடு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்த்துள்ளது. வேலூர் மண்டலத்துக்கு 42100 யூனிட் கரோனா தடுப்பூசி மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் வேலூர் மாவட்டத்திற்கு 18,600, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 4700, இராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 4400, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 14,400 யூனிட்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
பரப்பளவில் பெரிய மாவட்டமாகவும், அதிக மக்கள் தொகை கொண்டதும், அதிகளவு கரோனா நோயாளிகளைக் கொண்ட மாவட்டமான திருவண்ணாமலைக்கு வேலூர் மாவட்டத்தை விடக் குறைந்தளவு மருந்து ஒதுக்கியது எந்த விதத்தில் சரியானது என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எழுப்புகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைப் போல் கரோனா நோயால் அந்த மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது சரிதான். அதேநேரத்தில் அதை விடப் பரப்பளவில் பெரியதும், அதிக மக்கள் தொகை கொண்டதுமான மாவட்டத்துக்கு குறைந்த அளவு மருந்து தருவது எந்த விதத்தில் சரியானது என அதிகாரிகள் விளக்க வேண்டும் எனக்கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.