இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 18ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 20ந்தேதி திருவண்ணாமலை பாராளமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ( திமுக ) அவையில் கேள்வி நேரத்தின் போது ஒரு கோரிக்கையை முன் வைத்து பேசினார்.
அதில், திருவண்ணாமலை நகரம் என்பது உலக புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ள நகரமாகும். இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதந்தோறும் வரும் பௌர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த திருவண்ணாமலை வழியாக செல்லும் அதிவிரைவு ரயில்கள் குறிப்பாக புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.
திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் பல வருட கோரிக்கையான திருவண்ணாமலை- சென்னை இடையே ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். மேலும், பயணிகள் தங்கும் வசதி உட்பட போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் திருவண்ணாமலை இரயில் நிலையத்தை மேம்படுத்தி தரம் உயர்தித்தர வேண்டும்.
திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான புதிய இரயில் பாதை திட்டம் பணிகள் நடைபெறவில்லை. வரும் நிதி ஆண்டில் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டப்பணியை தொடங்க வேண்டும், திருவண்ணாமலை டூ சென்னை இடையே இரயில் சேவையை தொடங்க வேண்டும் என இரயில்வே அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் எனப்பேசினார்.