திருவண்ணாமலை நகரத்தில் இருந்து தினமும் 300க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு என தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பாண்டிச்சேரிக்கும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களுரூ, சிவமோகா போன்ற நகரங்களுக்கும், ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர், திருப்பதி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலையை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரம் திருவண்ணாமலை நகரம் என்பதால் கலசப்பாக்கம், போளுர், கீழ்பென்னாத்தூர், ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பணி காரணமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.
அதேபோல், தென்னிந்தியா அளவில் புகழ்பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் வரவும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். அப்படி வருபவர்கள் அனைவரும் பயன்படுத்துவது திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அறிஞர் அண்ணா பெயரிலான மத்திய பேருந்து நிலையத்தை தான். நகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தாலும் பயணிகள் அமரும்மிடம் எச்சில் துப்பிய கறைகளுடனும், ஓட்டடை அடிக்காத, தூய்மைப்படுத்தாத பேருந்து நிலையமாக இருக்கும். இது பொதுமக்களை முகம் சுளிக்கவே செய்து வந்தது.
இந்நிலையில் திடீரென அக்டோபர் 13ந்தேதி காலை திருவண்ணாமலை நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தனர், பின்னர் கட்டிடங்களில் உள்ள ஓட்டடைகளை சுத்தம் செய்ததோடு, பயணிகள் அமரும், காத்திருக்கும் பகுதிகளை சோப்பு பவுடர், பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவி சுத்தம் செய்தனர்.
இதுப்பற்றி துப்புரவு பணி செய்தவர்கள் தரப்பில் விசாரித்தபோது, தினமும் இரவில் பேருந்து நிலையத்தில் சேரும் குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்கிறோம். ஆனால் விடியற்காலையிலேயே குப்பை சேர்ந்துவிடுகிறது. அந்தளவுக்கு பயணிகள் இந்த பேருந்து நிலையத்துக்கு வருகிறார்கள். இன்று செப்டம்பர் 13ந்தேதி பௌர்ணமி. அதனால் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலையம் காலியாக இருந்தது. இந்த நேரத்தில் சுத்தம் செய்யலாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தார்கள். சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் ராஜா மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் காலையிலேயே வந்து குப்பைகளை வாரி சுத்தம் செய்துவிட்டு, தண்ணீர் ஊற்றி கழுவினோம் என்றார்கள்.