பிப்ரவரி 12 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏ.டி.எம்.களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 72.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், வேலூர் டி.ஐ.ஐீ முத்துசாமி இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கோலாரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களுக்கு உதவியதாக கே.ஜி.எப்பில் சிலரை சந்தேக வளையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களை திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான டீம் விசாரித்து வருகிறது.
கொள்ளையடித்து தப்பிச் சென்ற 6 பேரை குஜராத்தில் உள்ள வடோதரா மாவட்டத்தில் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களிடம் வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணன் தலைமையிலான டீம் விசாரித்து வருகிறது. ஹரியானா மாநிலம் மோவாட் மாவட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான டீம் விசாரணை நடத்தி வருகிறது. கொள்ளையடித்துவிட்டு இருவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்களை ஹரியானாவில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கொள்ளையை நடத்தியது ஹரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
கொள்ளையர்கள் முன்கூட்டியே திருவண்ணாமலைக்கு வந்து கொள்ளையடிப்பதற்கான ஆய்வுகளை செய்து விட்டு சென்றுள்ளனர். அதன்பின்பே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் பெரிய வெற்றி இது. மற்ற மாநில காவல்துறை இவர்கள் குறித்த தகவல்களை நம்மிடம் கேட்டுள்ளனர். இந்த கொள்ளை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது" என்றார்.