தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாள் பயணமாகத் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி சென்னையில் இருந்து நேற்று (29.12.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றார்.
இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மீளவிட்டான் என்ற இடத்தில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று (30.12.2024) புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளைத் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 75 ஆயிரத்து 28 மாணவியரின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிக்கையில் தெரிவித்திருந்தது அதன்படி. இந்த திட்டத்திற்கான விரிவாக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.
இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக இந்த பாலத்தைத் திறந்து வைக்க படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை ஒட்டி, “அறிவு சிலை (Statue Of Wisdom)” என்ற கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி, கே.என். நேரு, ஐ. பெரியசாமி, சேகர்பாபு, மெய்யநாதன், பொன்முடி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், டிஆர்பி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா, ஜகத்ரட்சகன், டி.ஆர். பாலு, கனிமொழி முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.