திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் 44வது ஆண்டு விழா இன்று சங்க அவைத்தலைவர் கே.எஸ் தங்கவேல் தலைமையில் நடந்தது. சங்கத்தின் தலைவர் விபி மணி வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் பால்பாண்டியன் ஆண்டறிக்கை வாசிக்க, பொருளாளர் காசிப்பாண்டியன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார்.
அறக்கட்டளை தலைவர் குணசேகரன் தீர்மானத்தை முன்மொழிந்தார். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கினார். நினைவில் வாழும் சங்கத்தின் பெயரால் 5 பேருக்கு விருதுகளை வழங்கி நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் சிறப்பு செய்தார்கள்.
வியாபாரிகள் சங்கத்தின் 44வது ஆண்டு விழா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மழை புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூ,ர் நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு ஜாதி மதம் மொழி கடந்து மனித நேயத்தை போற்றும் வகையில் பல உதவிகளை செய்த தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் குறிப்பாக வணிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஒரே தேசம் ஒரே வழி என்ற இந்தியா முழுதும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த மத்திய மாநில அரசுகள் ஒரே உரிமையில் வணிக உரிமத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும்,
இந்தியாவில் கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் வருமானவரி சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதி பொதுமக்கள் ரயிலில் முன்பதிவு பயணச் சீட்டு பெறுவதற்கு சென்ட்ரல், எழும்பூர், மயிலாப்பூர் போன்ற நெருக்கடிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் கால நேரத்தை சேமிக்க சேப்பாக்கத்திலேயே கணினி முன்பதிவு தொடங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கண்டுபிடித்து அரசு தடுக்க உதவும் வகையில் வணிகர்கள் தங்கள் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும், அண்டை மாநிலங்களில் புகையிலை பொருட்களுக்கு தடை இல்லாத சூழலில் தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு முதல் பான் மசாலா குட்கா தடை செய்த அரசு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. அரசு முழுமையாக கட்டுப்படுத்த உயர்மட்ட குழுவை உடனடியாக ஏற்படுத்தி பிரச்சனையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.