திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா
திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஆடிப்பரணி விழா நடந்தது. இன்று ஆடி கிருத்திகை விழாவும், மாலையில் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை விழா நேற்று முன்தினம் ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. வருகிற 17ம் தேதி வரை நடக்கிறது. ஆடி பரணி தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகள் சுமந்து வந்தனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று, மலைக்கோயிலில் இருக்கும் சுப்பிரமணிய முருகனுக்கு மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று ஆடி கிருத்திகையொட்டி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலையில் முதல் நாள் தெப்ப உற்சவமும், 16ம் தேதி 2ம் நாள் தெப்பமும், 17ம் தேதி 3ம் நாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது. இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுப்பிரணியசுவாமி கோயில் பணியாளர்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, 6.30 மணி அளவில் சரவண பொய்கையில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தெப்பத்தில் எழுந்தருளல், தீப ஆராதனை, தெப்ப உலா நடக்கிறது.