கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் ஆதார் கார்டு பெயர் சேர்த்தல் - நீக்கல், பிழை திருத்தம் செய்தல் மற்றும் புதிய ஆதார் கார்டு பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வங்கிகளின் சேவை மையம் செயல்படுகிறது.
அதனால் விருத்தாசலத்தை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் வங்கிக்கு வந்து செல்கின்றனர். இதனால் வங்கியில் சரிவர பணிகளை மேற்கொள்ள இயலாமல் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களிடம், 'காலதாமதமாகிறது. அதனால் விரைவாக பணிகளை செய்யுங்கள்' என கேட்டுள்ளனர். அதையடுத்து வாடிக்கையாளர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திடீரென விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் விசாரணை நடத்தினர். அப்போது 'சேவை மைய ஊழியர்கள் ஆதார் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், பதிவதற்காக வருகை தந்தால் உரிய பதில் அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தில் திடீரென 'இன்று போய் நாளை வா' என கூறி விரட்டுகின்றனர். எங்களது வேலைகளை விட்டுவிட்டு இதற்காக தினந்தோறும் அலையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வந்து ஆதார் கார்டு பதிய வேண்டும் என கேட்டதற்கு வங்கி ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. அதனால்தான் சாலை மறியல் செய்கிறோம்' என சாலை மறியல் செய்தவர்கள் புகார் கூறினர். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.