புதுக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு திருச்சி – புதுக்கோட்டைக்கு எம்.பி. ஆனார். இந்த நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ’திருநாவுக்கரசர் எம்.பியை காணவில்லை.. கண்டுபிடித்துக்கொடுங்கள்...’ என்று அரியமங்கலம் காவல் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில் திருச்சிக்கு வந்த எம்.பி திருநாவுக்கரசு - மேம்பாலம் கட்டுமான பணியினை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’பாலம் கட்டுமான பணி பல ஆண்டுகளாக நிலுவையில் கிடப்பதற்கு பாதுகாப்பு துறையின் ஒரு ஏக்கருக்கு உட்பட்ட நிலம் வழங்கப்படாதது தான் காரணம் என தெரிவித்தார்கள். இது தொடர்பாக நான் ஏற்கனவே மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோருடன் பேசி இருக்கிறேன்.
ராணுவ நிலத்தை விற்க முடியாது என்பதால் மாநில அரசு இதற்கு தகுந்த இடத்தை ஒதுக்கியது. அந்த இடத்தை பாதுகாப்பு துறை நிராகரித்து விட்டது. தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் என்ற இடத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது. இந்த நிலம் ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளை பாதுகாப்பு துறைக்கு விரைவாக அனுப்பி வைப்பதற்காக தமிழக வருவாய்த்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தேவைப்பட்டால் முதல் -அமைச்சரையும் சந்தித்து பேசுவேன். தமிழக அரசு அனுப்பிவிட்டால் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசி முடங்கி கிடக்கும் இந்த பாலம் கட்டுமான பணியை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரெயில்வே மேம்பால பணியானது 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த பாலம் கட்டுமான பணிக்கு புதிய டெண்டர் விடப்பட்டு உள்ளது. இன்னும் ஏழெட்டு மாதங்களில் அந்த பணியும் நிறைவடையும். நான் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவன். 42 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எம்.எல்.ஏ., எம்.பி, மாநில அமைச்சர், மத்திய மந்திரி என எத்தனையோ பதவிகளில் இருந்து உள்ளேன்.
நான் எங்கும் போய்விடவில்லை. வெற்றி பெற்ற பிறகு நான் தொடர்ந்து திருச்சிக்கு வந்து கொண்டு தான் உள்ளேன். எனக்கு விளம்பரம் தேவையில்லை, என்னை காணவில்லை என செய்தி போடலாமா... அந்த புகார் கூட காவலநிலையத்தில் ஏற்கப்படவில்லை. ஏதோ நான்கு பேர் கொண்டு போய் புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் கட்சி எல்லாம் ஒரு கட்சியா? அவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள். அவர்கள் மீது அவதூரு வழக்கு தொடர்வேன்’’ என்றார்.
மஸ்ஜிலி கட்சி சார்பாக திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் காணவில்லை என புகார் அளித்தவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தல் களப்பணி ஆற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.