Skip to main content

திக் திக் திருமாவளவன் வெற்றி நள்ளிரவைக் கடந்து அறிவிக்கப்பட்டது -தொண்டர்கள் வெடிவெடித்து ஆரவாரம்

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து அணிகளும் பல லட்சம் வாக்குகள் பெற்று சாதனை படைத்த தகவல்கள் வந்துகொண்டு இருந்தது.

 


ஆனால் சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் திக் திக் அனுபவமாக இருந்தது.  முதலில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை என அறிவிக்கப்பட்டது.  பின்னர் திருமாவளவன் முன்னிலை என அறிவிக்கப்பட்டது.  இந்த முன்னிலை தகவல்கள் மாறி மாறி வந்தது. ஆனால் இருவருக்கும் உள்ள வித்தியாசம் மிக சொற்ப எண்ணிக்கையில் தான் இருந்தது.

 

 Thirumavalavan's victory was announced at midnight



தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்ட அனைத்து அணிகளும் முன்னிலை என செய்திகள் வந்த நிலையில் மதியத்திற்கு மேல் திருமாவளவன் முன்னிலை என தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அதிமுக சந்திரசேகர் 4 ஆயிரம் வாக்குகள் முன்னிலை என அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் திருமாவளவன் மீண்டும் முன்னிலை வகித்தார்.  இதனை தொடர்ந்து அவர் இரவு 9 மணிக்கு 19-வது சுற்றில் 9544 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.  இந்த நிலையில் 10 மணிக்கு மேல் திக் திக்  வினாடிகள் ஆரம்பமானது  இரவு 11 மணிக்கு மேல் அதிகார பூர்வ அறிவிப்பு இல்லாமல் முன்னிலை வகித்த திருமாவளவன் பின்னடைவு என தகவல்கள் பரவியது.  தேர்தல் ஆணையம் திருமாவளவனின் வெற்றியை மாற்றி அறிவிக்க முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

 



அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது . வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஜெனரேட்டர் வசதியுடன் மின்விளக்குகள் எரிந்தது. ஒரே பரபரப்பான சூழ்நிலை கானப்பட்டது. இரவு 11.30 மணிக்கு மேல் திருமாவளவன் 3,186 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை என்று தகவல் வந்தது . அதனை தொடர்ந்து 25 சுற்று வரை எண்ணிய வாக்குகளின் அடிப்படையிலும் தபால் வாக்குகளை சேர்த்து திருமாவளவன் 500229 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் 497010 வாக்குகளை பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. 

 

 Thirumavalavan's victory was announced at midnight

 

இதனை தொடர்ந்து 3219 வாக்குகள் அதிகம் பெற்று திருமாவளவன் வெற்றிபெற்றதாக நள்ளிரவு கடந்து அதிகாலை 2.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதனை கேட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியில் இருந்த தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் வெடிவெடித்து கொண்டாடி ஆரவரம் செய்தனர். இந்தநிலையில் சிதம்பரம் தொகுதியின் தேர்தல் அதிகாரி அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

 



சிதம்பரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில் திக் திக் என அமைந்தது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் முடியும் வரை அங்குலம் அங்குலமாக எதிரனியினரை தோற்கடித்தது அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் அதிகாலை வரை பெரும் பரபரப்பாக இருந்தது. 

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்