விசிக சார்பில் சென்னை வேப்பேரியில் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரியார் ஒளி விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விருதுகளை வழங்கிவிட்டு வாழ்த்துரை ஆற்றினார். ''இந்த விருது பெறுவர்களில் முதல்வர் வரிசையில் 4வது நபராகப் பெறுகிறார் முதல்வர் ஸ்டாலின். திமுகவுடனான உறவு தேர்தல் சார்ந்த உறவு அல்ல, எங்கள் உறவு கொள்கை சார்ந்த உறவு. ஒருமுறை கலைஞர் அவர்கள் சொன்னார், ‘எங்களுக்கும் விசிகவிற்குமான உறவு கொள்கை ரீதியான உறவு’ என்றார். அந்தவகையில் நீடித்துவருகிறது. திமுகவுடன் நின்றால்தான் பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முடியும். நாங்கள் வேண்டுகோளை முன்வைக்கிறோம். அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது. ஆகையால் மற்ற மாநிலத்தவரை ஒருங்கிணைத்து பிஜேபிக்கு எதிரான தளத்தில் நிற்க வேண்டும். அடுத்தமுறை பாஜக வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. தமிழகத்திற்கும் இது நல்லதல்ல. நீங்கள் தமிழகத்தில் உள்ள அல்லு சில்லுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், அற்பர்களைப் பற்றி கவலைகொள்ளாமல் அகில இந்திய அளவில் நீங்கள் கவனம்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை நாம் கட்டினால் அது பாஜகவிற்கு சாதகமாக முடியும். உங்களைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்குப் பேரிடியாக தேர்தல் வெற்றி மூலம் பதில் அளித்த முதல்வர் நீங்கள். அந்த துணிச்சல்கள் எங்கிருந்து வந்தது என்றால், பெரியார் மடியில் விளையாட, அண்ணாவின் அரவணைப்பில் இருக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததால்தான் இது முடிந்துள்ளது. அந்த வழிவந்த நீங்கள், வியூகம் அமைப்பதில் கலைஞரைப் போல் செயல்பட வேண்டும். திமுகவுடன் என்றும் நாங்கள் தோள்கொடுத்து நிற்போம்'' என்றார்.