கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''ஒற்றை கோரிக்கை மதுவிலக்கு என்பதுதான். இது நாம் புதிதாக எழுப்புகின்ற கோரிக்கை அல்ல. நம்முடைய புரட்சியாளர் அம்பேத்கர், கொள்கை ஆசான் என்று அறிவிக்கப்பட்ட கௌதம புத்தர் காலத்தில் இருந்த இந்த கொள்கை மக்களிடத்திலே பேசப்பட்டு வருகிறது. திருமாவளவன் திடீரென்று என் மதுவிலக்கை பற்றி பேசுகிறார் என்று ஆளாளுக்கு தம் வாய்க்கு வந்தபடி எல்லாம் சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனுக்கு ஏன் இந்த திடீர் ஞானம் என்கிறார்கள்? திருமாவளவன் புத்தர் மகாத்மா புலே, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், அய்யன் திருவள்ளுவர், ஐயா வைகுண்டர், ஸ்ரீ நாராயண குரு போன்ற மாமனிதர்கள் கொள்கைகளை உள் வாங்கியவன். அந்த ஞான வம்சத்தில் இருந்து வந்தவன். அதனால் எனக்கு அந்த ஞானம் உதித்தது. நாங்கள் ஜாதி பெருமை, மதப் பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல. பகவான் புத்தரின் கொள்கைகளை பேசக்கூடியவர்கள்.
இந்த மாநாட்டில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு செய்தி இதுவரையில் நம் மேடைகளில் பார்த்திராத ஒன்று. இதுவரை நாம் பயன்படுத்தப்படாத இரண்டு உருவங்கள் ஒருவர் தேசப்பிதா காந்தியடிகள் அவருக்கு இன்று வெட்டு உருவங்களை வைத்திருக்கிறோம். இன்னொருவர் மூதறிஞர் ராஜாஜியின் வெட்டு உருவத்தை வைத்திருக்கிறோம். இது தேர்தலுக்காக அல்ல. அரசியல் உள்நோக்கம் கொண்ட மாநாடு அல்ல. மதுவை வேண்டாம் என்று சொல்லக்கூடிய மாமனிதர்கள் அத்தனை பேருடைய வாழ்த்துக்களும் நமக்கு தேவை. காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகளில் இரண்டு கொள்கைகள் உடன்பாடு உண்டு. ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. அவருடைய உயிர் மூச்சு கொள்கைகளில் ஒன்று மதுவிலக்கு. அதனால்தான் காந்தியடிகளின் பிறந்த நாளில் அக்டோபர் இரண்டில் இந்த மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது.
காந்தி மது ஒழிப்பிற்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு அது எதிராக இருக்குமோ என்று தமிழிசை சொல்லியுள்ளார். தமிழிசை என்ன சொல்ல வருகிறார் என்றால் திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று சொல்கிறார். அக்கா தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போல் எனக்கும் அந்த பழக்கம் இல்லை. நான் தடை அறிவியல் துறையில் ஒரு அறிவியல் உதவியாளராக, ஒரு இளநிலை விஞ்ஞானி என்ற பொறுப்பில் பணியாற்றினேன். அப்பொழுது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு டிவிஷன் மாற்றுவார்கள். அதில் ஒரு டிவிஷன் மதுவிலக்கு துறை. மதுவிலக்கு துறையில் என்னவென்றால் போலீஸ் பிடித்துக் கொண்டு வரும் கள்ளச்சாராயம், திருட்டுத்தனமாக வரும் மது ஊறல், மது ஆலைகள் உற்பத்தி செய்யும் பீர் விஸ்கி, பிராண்டி எல்லாம் அங்கே எங்களிடம் தான் வரும். நாங்கள் பிப்பெட்டை வைத்து உறிந்து அதை குடுவையில் போட்டு அதை ஆய்வு செய்து அதில் எவ்வளவு ஆல்ஹகால் இருக்கிறது என்று கண்டுபிடித்து சர்டிபிகேட் கொடுக்கின்ற இடத்தில் நான் வேலை செய்தேன். சர்டிபிகேட் கொடுத்தேன். நான் கையெழுத்து போட வேண்டும். பீரில் நான்கிலிருந்து 5% தான் ஆல்கஹால் இருக்க வேண்டும். விஸ்க்கியில் 35 சதவீதத்திற்கு மேல் இருக்கும். பிராந்தியில் 40 க்கு மேல் இருக்கும். ராவாக குடிக்க முடியாது. பீரை அப்படியே ஊற்றிக் கொள்ளலாம். ஆனால் பிராந்தி,விஸ்கியை தண்ணீர் ஊற்றி கலந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் அதில் அதிக அளவு அடர் ஆல்கஹால் இருக்கும். அது குடலை அப்படியே புண்ணாக்கி விடும். சோதனையின் போது விரும்பினால் நாம் உறிஞ்சி குடிக்கலாம். அது யாருக்கும் தெரியாது. டேஸ்ட் பண்ணி பார்க்கலாம் யாருக்கும் தெரியாது. ஒரு ஓரத்தில் தான் உட்கார்ந்து வேலை செய்வோம். அந்த வேலை செய்தவன். நான் அப்பக்கூட தப்பி தவறி கூட நாவில் ஒரு சொட்டு மது கூட பட்டதில்லை'' என்றார்.