பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவா செயல் திட்டத்தைப் போன்றது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
வேலூரில் நடைபெறும் திராவிட நட்புக் கழகத்தின் மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வேலூர் வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தனியார் ஓட்டல் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வருகிற இருபதாம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என நான் நம்புகிறேன். பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவா செயல் திட்டத்தைப் போன்றது. அதன் மூலம் மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவது என்பது தான் அவர்களின் உண்மையான உள்நோக்கம். இதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வருகிற 18 ஆம் தேதி பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விசிக சார்பில் நான் கலந்து கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இக்கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பீகாரில் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் குடியரசு தலைவருக்கு ஆளுநர் குறித்து எழுதிய கடிதத்தை வரவேற்கிறோம். குடியரசுத் தலைவர் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு எதிர்வினை ஆற்றுவார் என நம்புகிறோம். குடியரசுத் தலைவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சங் பரிவார அமைப்புகள் அவரை செயல்படாமல் கட்டுப்படுத்தக்கூடாது. ஆளுநர் அரசியல் அமைப்பின் சட்டப்பூர்வமான கடமைகளை செய்யத் தவறி சனாதனத்தை குறித்து நாள்தோறும் பேசி வருகிறார். ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது மட்டுமே அவரது நோக்கமாக உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர் போன்ற பெயர்களையே உச்சரிக்க மறுக்கிறார். வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என செல்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மசோதா எவற்றையும் உடனடியாக ஒப்புதல் அளிப்பது இல்லை. ஏராளமான சட்ட மசோதாக்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார் என்பதற்கு இது எல்லாம் ஒரு சான்று. எனவே முதல்வரின் கடிதம் குறித்து குடியரசுத் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்; எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஆட்சியைக் கலைத்தாலும் கவலைப்பட மாட்டோம் என முதல்வர் பேசியது குறித்து கேட்டதற்கு, “இந்திய பாஜக அரசோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாக முதல்வரின் இந்த கூற்றைப் பார்க்கிறேன். அது வரவேற்கத்தக்கது. அவரின் கொள்கைப் பிடிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது” என்று பதிலளித்தார்.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து கேட்டதற்கு, “தமிழக காவல்துறையினர் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சங்கம் வைத்துக்கொள்ள உரிமை இல்லை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் காவல்துறையினருக்கு உள்ளது. அவர்களுக்கும் பல அரசு ஊழியர்களைப் போல 8 மணி நேரம் வேலை என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும். 21 ஆம் நூற்றாண்டிலும் இப்படியான நெருக்கடிகள் காவல்துறைக்கு உள்ளது ஏற்புடையது அல்ல. நிர்வாக சீர்திருத்தம் தேவை. டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகுந்த துயரத்தை தருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல. மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுகிறேன்” எனக் கூறினார்.