நாடு முமுவதும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு இயந்திரம் 24 மணி நேரமும் போராடி வருகிறது. கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசமும் கையுறையும் கட்டாயம் என மருத்துவத் துறை அறிவுறுத்தியதன் அடிப்படையில் திரும்பிய பக்கமெல்லாம் பொதுமக்கள் முகக்கவசத்துடன் காணப்படுகிறார்கள்.
இதனால் மருந்துக் கடைகளில் முகக்கவசம் பதுக்கலோடு அதிகம் விலைக்கும் விற்பனை செய்து வந்தனா். இதையடுத்து முகக்கவசத்தின் தட்டுப்பாடுகள் அதிகரித்ததால் அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும் தன்னார்வலர்களும் முகக்கவசத்தைத் தயார் செய்து இலவசமாக மக்களுக்கு கொடுத்து வருகின்றனா்.
மேலும் வீடுகளில் ஆண்கள் மற்றும் சுயஉதவிக்குழுப் பெண்கள் முகக்கவசத்தைத் தயாரித்து பொதுமக்கள் மற்றும் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனா். இதை விற்பனை செய்வதில் இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் பலருக்கு கரோனா ஊரடங்கில் வேலை வாய்ப்போடு குறைந்த அளவு வருமானமும் கிடைக்கிறது. இதைப் பின்பற்றி தற்போது குமரி மாவட்டத்தில் முகக்கவசம் தயாரிப்பதைக் குடிசைத் தொழிலாகவே பின்பற்றி வருகின்றனா். மேலும் இவ்வாறு தயார் செய்வது தரமானதாக இல்லையென்று பலா் குற்றம்சாட்டியும் உள்ளனா்.