விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பேரரசு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. அதேபோல், வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செய்கின்றனர்.
இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்” என்று பதிவிட்டுள்ளார்.