Skip to main content

அட்வைஸ் சொன்ன பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்திய பெண்... போலீசார் விசாரணை 

Published on 23/08/2020 | Edited on 23/08/2020
police

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரிலுள்ள கிழக்கு வீதியில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் டாக்டர் ரேவதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் டாக்டர் ரேவதி. அப்போது முககவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் ஒருவர் உள்ளே வந்தார். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை. அதுகுறித்து பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். அவரிடம் டாக்டர் ரேவதி விசாரித்தபோது திருக்கோவிலூர் சந்தப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயந்தி என்று கூறினார்.

 

அப்போது டாக்டர் ரேவதி ஜெயந்தியிடம் முக கவசம் அணிந்து வருமாறும் அப்படி வருபவர்களுக்கு தான் சிகிச்சை அளிக்கப்படும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, டாக்டர் ரேவதியை ஆபாசமாக திட்டி கையால் அவரை தாக்கியதோடு அங்கிருந்த பொருட்களை எல்லா உடைத்து சேதப்படுத்தி டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனைக் கண்டு மிரண்டுபோன டாக்டர் ரேவதி, திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஜெயந்தி மீது புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் தாஸ், ஜெயந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முகக் கவசம் அணிவது அவசியமென்று அரசு சொல்கிறது. ஒவ்வொரு மனிதரின் மீதுள்ள அக்கறையால் அவர்கள் உயிரை காப்பாற்றும் வேண்டும் என்று முகக் கவசம் அணிய வேண்டிய அவசியத்தை எடுத்து சொல்லப்படுகிறது. அதை வலியுறுத்தி சொன்ன ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் ஒரு பெண்மணி. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்