
திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். பெயிண்டர் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் யஷ்வந்த் (5 வயது) வாய்ப்பேச முடியாதவா். இரண்டாவதாக மகள் லக்ஷிதா (3வயது), மூன்றாவதாகப் பிறந்து முப்பதுநாள் ஆன ஆண் குழந்தை கையில் உள்ளது. யஷ்வந்த் வழக்கம்போல வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில், நேற்று 3.30 மணியளவில், தாய் நளினி தேநீர் அருந்த வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் யஷ்வந்த் வீட்டிற்கு வராததால், அக்கம் பக்கங்களில் உள்ள தெருக்களில் தேட ஆரம்பித்து அருகில் தா்கா, கோவில், உள்ளிட்ட பகுதிகளில் தேடியும் கிடைக்காத நிலையில், மாலை தில்லைநகா் காவல்நிலையத்தில் நளினி புகார் மனு கொடுத்துள்ளார்.
இரவு 9 மணியளவில், யஷ்வந்த் விளையாடிக் கொண்டிருந்த பகுதியில், உள்ள 6 அடி ஆழம் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்த குப்பைகளை அகற்றிவிட்டுப் பார்த்த போது சாக்கடை கால்வாயில் பிணமாக மிதந்துள்ளான் சிறுவன் யஷ்வந்த். இதனைப் பார்த்த தாய் நளினி கதறி அழுது மயங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினா் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததோடு உடலை மீட்டுள்ளனா். அதன்பின் தில்லை நகர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில், இதேபோன்ற பல பள்ளங்கள் இன்று மாநகராட்சியால் தோண்டப்பட்டுள்ளது. தினம்தினம் இந்த குழிகளுக்குள் பலா் விழுந்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், கடந்த 30 வருடங்களாக திறந்தேதான் கிடக்கிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். அதிலும் திருச்சி மாநகராட்சியாக கடந்த 1991-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட நாள் முதல், இங்குள்ள பல கழிவுநீா்க் கால்வாய்கள் மூடப்படாமல் கிடக்கிறது. அதில், இதுவும் ஒன்று. இந்தக் கழிவுநீா்க் கால்வாயை மூட வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
இறந்துபோன குழந்தை யஷ்வந்த் வீட்டுக்கு முன்னதாகவே 6 அடி அகலமுள்ள 7 அடி ஆழம் கொண்ட திறந்தவெளி சாக்கடையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்குத் திறந்தவெளியில் சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. ஆனால் அது மூடப்படாமல் இருப்பது தொடர்ந்து இப்பகுதியில் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனா்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சோ்ந்த வழக்கறிஞா் கிஷோர் பேசுகையில், திருச்சி கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால் இந்த மாநகராட்சியில் உள்ள சாக்கடைகளுக்கு 'அரசு மழை நீா் வடிகால்' என்று பெயரை மாற்றி வைத்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட அந்த வடிகால்களில் 5 சதவீதம் கூட மூடப்படாமல் திறந்த வெளி கால்வாய்களாகவே உள்ளது. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுக்குறித்த தகவல்களைக் கேட்டுள்ளோம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதாக திருச்சி மாநகராட்சிக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கியது. ஆனால் அதே மத்திய அரசு இரண்டாம் கட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிறைவடைந்த பணிகளைப் பார்வையிட, கடந்த 2019-ஆம் ஆண்டு வந்தபோது அவா்களுக்கு மாநகராட்சி முன்னதாகத் தயார் செய்து வைத்திருந்த இடங்களுக்கு, தணிக்கை குழுவை அழைத்துச் சென்றது. ஆனால், அவா்களுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. இதனால், கடந்த முறையும் வாங்க வேண்டிய விருது கையை விட்டுச் சென்றது. விருதுக்காக மட்டுமே இங்கு பல பணிகள் தற்காலிகமாகச் செயல்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், 'ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்திருக்கலாகாது பாப்பா' என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் அனைத்துப் பள்ளி பாடத்திலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் திருச்சி மாநகராட்சியின் பொறுப்பற்ற, நிர்வாகத் திறமை இல்லாத செயலால் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தை, யஷ்வந்த் மூடப்படாத ஐந்து அடி சாக்கடையில் விழுந்து தனது இன்னுயிரை இழந்துள்ளது வேதனையிலும் வேதனை.
இந்தப் பொறுப்பற்றச் செயலுக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகளை, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து திருச்சி மாநகராட்சி மீது வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்து மாநகராட்சியின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த இழப்பிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். மூத்த மகனை இழந்த அந்த தாயின் கதறல் திருச்சியின் தெருக்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எனவே இனியும் இந்தக் கழிவுநீா்க் கால்வாய்கள், பாதாளச் சாக்கடைகளால் ஒரு உயிர்கூட பிரியக் கூடாது என்பதை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.