வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவில் ஃபாரூக் என்பவர் வீடு உள்ளது. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். செப்டம்பர் 3ந்தேதி காலை மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. வீட்டின் வெளி பூட்டை உடைத்து வீடிற்குள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம், வீட்டுக்குள் இருந்த தொலைக்காட்சி, ஹவன் உட்பட பொருட்கள் திருடி சென்றுள்ளனர்.
வீட்டில் உள்ள மூன்று அறைகளின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பீரோக்களையும் உடைத்து திறந்து பார்த்துள்ளனர். உள்ளே விலை உயர்ந்த பொருட்கள், பணம் எதுவும் இல்லாததால் நொந்துப்போன திருடர்கள், சமையல் கட்டுக்கு சென்று பொறுமையாக அமர்ந்து சேமியா, மக்ரூணி என விதவிதமாக சமைத்து சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வாணியம்பாடி காவல்நிலையத்தில் ஃபாருக் புகார் தர, அதனை பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருடச்செல்லும் வீட்டின் கதவை உடைக்கும் திருடர்கள் சமைத்து சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் நகரில் ஒரு வீட்டில் திருடப்போன திருடர்கள் அங்கு களி செய்து வைத்திருந்துள்ளார்கள், அதற்கு தொட்டுக்கொள்ள மீன் குழம்பு செய்து சாப்பிட்டுவிட்டே திருடி சென்றுள்ளார்கள், இதேபோல் நாட்றாம்பள்ளியிலும் திருடிக்கொண்டு அந்த வீட்டிலும் சமைத்து சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார்கள்.
வழக்கமாக திருடர்கள் திருட வந்தால் திருடி முடித்தோமா அடுத்து அங்கிருந்து தப்பி செல்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் வித்தியாசமாக திருடிய வீட்டில் இரவு சமைத்து சாப்பிட்டுவிட்டு செல்வது வித்தியாசமாக இருக்கிறது.