
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க மாநகர காவல்துறையினருக்கு தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி திருச்சி கீழ ஆண்டாள் வீதியில் நடந்து சென்ற நபரிடம் ஒருவர் கத்தியை காண்பித்து ரூ.2300 கொள்ளை அடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்தனர். இதில் அய்யப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் காவல்துறையினர் விசாரணையில் கைது செய்யப்பட்ட அய்யப்பன் மீது திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடியதாக 3 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக 2 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்போன் கடை உடைத்து செல்போன்களை திருடியதாக 2 வழக்குகளும், பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 2 வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் நிலுவையில் இருந்ததை கண்டறிந்தனர்.
இதன்மூலம் அய்யப்பன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குணம் கொண்டவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து காவல் ஆணையர் G.கார்த்திகேயன் அய்யப்பனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அய்யப்பன் மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணை சார்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சியில் இதுபோன்ற வழிப்பறி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.