கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி மகன் சரத்குமார். விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு பாதூர் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த காரை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அன்று இரவே இறையூரைச் சேர்ந்த மஹிமை ராஜ்(30) என்ற இளைஞர் சரத்குமார் நிறுத்திவிட்டுச் சென்ற காரின் பின்பக்கம் டிக்கியை உடைத்து அந்த ஓட்டை வழியாக காருக்குள் புகுந்து காரை திருடி செல்வதற்கு முயன்றுள்ளார். அப்போது மஹிமை ராஜ், போதை மயக்கத்தில் இருந்துள்ளார். அதனால் அந்த காருக்குள்ளேயே தூங்கிவிட்டார். இதை தற்செயலாக பெட்ரோல் பங்குக்கு, பெட்ரோல் போட வந்தவர்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திருநாவலூர் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு விரைந்துச் சென்று, காருக்குள் போதையில் தூங்கிக்கொண்டிருந்த மஹிமை ராஜை எழுப்பி விசாரித்தனர். அவர் மது போதை தலைக்கேறியதால் காருக்குள்ளேயே தூங்கி விட்டதாக கூறியுள்ளார். மேலும் மஹிமை ராஜ் காரை திருட வந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது கார் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.