கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி வட்ட பகுதிகளில் 48 ஆயிரத்து 850 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வீராணம் நிரப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடும் வெயில் மற்றும் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து 39 அடியாக இருந்தது. இதனால் சென்னைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் அனுப்பினர்.
இந்தநிலையில் கர்நாடக பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து அங்கிருந்த உபரிநீர் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனால் மேட்டூர் அணை கிடுகிடுவென நிரம்பி 116 அடி முழுகொள்ளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார். இதனைத்தொடர்ந்து கல்லணையிலிருந்து கடந்த 17ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் கொள்ளிடம் மற்றும் காவிரியில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்தனர். கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள கீழணைக்கு வந்து சேர்ந்தது.
இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரியை நிரப்பும் நோக்கோடு கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரை வீராணம் ஏரிக்கு திறந்து திறந்து விட்டனர். இந்த தண்ணீர் வியாழக்கிழமை காலை வீராணம் ஏரியை அடைந்தது. இந்த தண்ணீரை வழிநெடுகிலும் விவசாய சங்கத்தினர். விவசாயிகள் மலர்த்தூவி காவிரி நீரை வரவேற்றனர். இந்தநிலையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமையென்று 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது இதனால் கடலூர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் வீராணம் ஏரியிலிருந்து தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிட முடிவு செய்துள்ளனர். கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் திறந்து விட்டதால் கீழணை பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடித்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.