நடைப்பயிற்சியின்போது, தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட சங்கிலியை மீட்டுத் தருமாறு காவல்துறையிடம் பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிய வேளையில், காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளார் திரைப்பட கதாநாயகனான அந்த வழிப்பறித் திருடன்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட செஞ்சை நாச்சுழியேந்தலைச் சேர்ந்தவர் நாகராசன். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இவரும், இவருடைய மனைவியான குழந்தையம்மாளும் இணைந்து அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். சம்பவத்தன்று கணவருடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொண்ட குழந்தையம்மாள், தனக்கு சோர்வாக இருப்பதாகக் கூறி வீடு திரும்ப எத்தனித்து, கணவரிடம் கூறிவிட்டுத் தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இவ்வேளையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர், குழந்தையம்மாள் முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’யை தெளித்து, அவரை மிரட்டி, கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியைக் கேட்டுள்ளனர். செய்வதறியாத அவர், தனது நகையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். மனுவைப் பெற்ற துணைச்சரக காவல்துறை டிஎஸ்பி அருண் உத்தரவின் பேரில், தெற்கு காவல்நிலைய எஸ்.ஐ.,க்கள் தவமுனி, பார்த்திபன் தலைமையில் சுரேஷ், பார்த்திபன், தட்சிணாமூர்த்தி மற்றும் முருகன் ஆகிய காவலர்கள் அடங்கிய தனிப்படையினர், குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இது தொடர்பாக நகரிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சங்கிலி பறிப்பு குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பேசிய காரைக்குடி துணைச்சரக காவல்துறையினரோ, "சம்பவத்தன்று அந்தம்மாவோட செயினைப் பறித்தவர்கள் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அங்கிருந்து அரியக்குடி, ஆறாவயல், கண்டனூர் ரோடு வழியாக காரைக்குடியில் நுழைந்தது எங்களுக்குத் தெரிய வந்தது. வண்டி எண், அடையாளம் போன்றவற்றைக் கொண்டு தீவிரமாக விசாரணை செய்தோம். அதில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் பத்தாவது வீதியில், அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருந்தவர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில் அப்பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டது நான்தான் என்று அந்த அபார்ட்மெண்டில் இருந்தவர் தானே ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் அவர் தேவகோட்டை கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சீனு என்கின்ற சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர், ‘குப்பைக்காரன்’, ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘தேவக்கோட்டை காதல்’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தற்போது அடுத்தப் படத் தயாரிப்பிற்கான கதை டிஸ்கஷனுக்காகவும், லொகேஷன் பார்ப்பதற்காகவும் காரைக்குடியில் தங்கியிருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக நடித்துக்கொண்டே சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டது இங்கு மட்டும்தானா, இல்லை பல்வேறு இடங்களிலா இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றோம்” என்றனர். மேலும், இவர் கைக்காட்டியதின் பேரில், இவருடன் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியைத் தொண்டிப் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: விவேக்