சேலத்தில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் கிச்சிப்பாளையம் திருமுருகன் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இந்த மையத்தில் இருந்து மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட மும்பை அதிகாரிகள், இதுகுறித்து சேலத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, சேலம் நகர உதவி ஆணையர் ஈஸ்வரன், கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் (பொ) குமார், உதவி ஆய்வாளர் சத்யமூர்த்தி ஆகியோர் ஏடிஎம் மையத்திற்கு விரைந்தனர். அந்த மையத்தின் உள்ளே சென்று பார்த்த போது, ஏடிஎம் இயந்திரத்தின் முன்பக்க பூட்டு மட்டும் திறந்து இருந்தது. இயந்திரத்தின் உள்ளே இருந்த ரகசிய லாக்கரை திறக்க முடியாததால், கொள்ளையர்கள் முயற்சியைக் கைவிட்டு தப்பி ஓடியிருப்பது தெரிய வந்தது.
விரல் ரேகைப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த விரல் ரேகைகளை பதிவு செய்தனர். மர்ம நபர்களை கிச்சிப்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் அந்த மையத்திற்குள் புகுந்து இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.