புயல் சேதத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசு சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நிவர் புயல் பாதிப்பு காரணமாக, சென்னை சைதாப்பேட்டையில் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற மக்களுக்கு வேறு ஒரு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும். போன 2015 புயல் வெள்ளத்தில் அரசு பாடம் கற்றுக் கொண்டபோதும், எந்தப் பலனும் இல்லை. ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததா என்று கேட்டால்... இங்கே இருப்பவர்களிடம் கேளுங்கள்.
அரை மணி நேரத்திற்கு முன் வெள்ளம் வரும் காலி பண்ணுங்க எனச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு எல்லா நிலவரங்கள் தெரியும். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பது ஊரறிந்த உண்மை. இப்பொழுது சென்னையைப் பொறுத்த வரையிலும் முன் இருந்ததை விடச் சிறப்பாக இருக்கிறது என்பது உண்மை. ஆனால் பாராட்டுக்குரியதா... என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இவர்களுடைய நிலைமையைப் பார்க்கும்பொழுது பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.