அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனையிலிருந்து நீதிமன்றக் காவலுக்காகப் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவலில் இருக்கும் பொழுது பொதுவாகவே ஏ வகுப்பு நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஏ வகுப்பிற்குரிய அந்த சலுகைகள் தான் கொடுக்கப்படும். ஆனால் இன்று பத்திரிகைகளில் அவருக்கு டிஜிபி பார்த்து சல்யூட் அடிக்கிறார், ஜெயிலர் பார்த்து சல்யூட் அடிக்கிறார் எனத் தகவல் வருகிறது. எந்த அளவுக்கு சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். இது மட்டுமல்ல உள்ளே யாரும் போக முடியாது என்ற காரணத்தினால் உள்ளேயே ஒரு ஹாஸ்பிடல் இருக்கிறது. பெரிய அளவிற்கு ஒரு வசந்த மாளிகை போல செந்தில் பாலாஜிக்கு கொடுத்திருக்கிறார்கள்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு சிறை விதிகளை மீறி இன்றைக்கு அவருக்கு இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால் இது குறித்து அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? சிறை கைதி எண் கொடுக்கப்பட்டு சிறைக்குப் போய்விட்டார். ஆனாலும் கூட அவர் இன்னும் அமைச்சராக இருக்கிறார். இது தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம்'' என்றார்.