விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மழவராயன் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் சுந்தரிபாளையம். இந்த கிராமத்தில் நடைபெற்ற தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் கூலி குறைவாக வழங்குவதாகக் கூறி பொதுமக்கள் நேற்று விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் இரு மார்க்கத்திலும் செல்லவேண்டிய வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் சார்பில், “எங்கள் ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஊராட்சி செயலாளர் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறார். வேலைக்கு வராத நபர்களுக்கும் வந்ததாகக் கணக்குக் காட்டி அவர்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு அதைப் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள். அதேபோல் வேலைக்கு வருபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள கூலியைத் தராமல் தங்கள் இஷ்டப்படி குறைத்துக் கொடுக்கிறார். இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களை மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அரசு நிர்ணயித்த கூலியை எங்களுக்கு வழங்க வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனைக்கேட்ட போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போது மறியலைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே சட்டத்தை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சுந்தரி பாளையத்தைச் சேர்ந்த கண்ணன், கார்த்திக்ராஜா, அருட்செல்வம், ராஜசேகர், முருகன், மணிபாலன், லட்சுமணன், ராஜா, உட்பட 90 பேர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.