நாகப்பட்டினத்தில் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் எட்டு வீடுகள் அடுத்தடுத்து குளத்தில் சரிந்து விழுந்தது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலறி அடித்து ஓடிவந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள சிவன்கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. அந்த குளத்தை சுற்றிலும் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. கடந்த வடகிழக்கு பருவமழையாலும், ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் வரண்டுகிடந்த சிவன் கோவில் குளம் நிரம்பியது. வரண்டு கிடந்தபோது ஆக்கிரிமித்து கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் குளம் நிரம்பி வழிவதால் பின்புறம் சுவர்கள் முற்றிலுமாக ஈரம்காத்து இடிந்துவிழும் நிலைக்கு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை 6 மணிக்கு குளத்தின் வடகரை பகுதியில் கட்டப்பட்டிருந்த சங்கர், கண்ணன், ஆனந்த், பாலு, சுகந்தி உள்ளிட்ட எட்டு பேரின் வீடுகளின் சுவர்கள் அடுத்தடுத்து மளமளவென குளத்தில் இடிந்து விழுந்து மூழ்கியது. இதையடுத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என கட்டிய துணிகளோடு வீட்டைவிட்டு வெளியில் ஓடினர். தொடர்ந்து வீட்டின் மறுபகுதி சுவர்களும், வீட்டில் இருந்த கட்டில் பீரோ பாத்திரம் என அனைத்தும் அடுத்தடுத்து மளமளவென குளத்துக்குள் சரிந்து மூழ்கியது.
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மணி என்பவர்கூறுகையில் " குளம் தூர்வாராமல் பல ஆண்டுகளாக கிடத்ததை சாதகமாக்கிக்கொண்டு, இருக்க இடமில்லா ஏழைகள் குளத்தின் கரையோரம் வீடுகட்டினர், இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் மழையும், தண்ணீரும் வந்ததால் குளம் நரம்பி வீடும், சுவர்களும் ஓதம் காத்துவிட்டது, தற்போது கடுமையான வெயிலால் சுவர்களின் ஈரம் காய காய வலுவிழந்து சாயத்துாங்கிடுச்சி. விடியற்காலை என்பதால் முதலில் சாய்ந்த வீட்டில் இருந்தவர்கள் கடைகளுக்கும், தண்ணீர் எடுக்கவும் சென்றுவிட்டனர், அதனால் உயிரிழப்பு இல்லாமல் போயிடுச்சி அடுத்தடுத்த வீடுகளில் உள்ளவர்களும் வெளியில் வந்துவிட்டனர். தற்போது வீட்டில் அனைத்தையும் இழந்துவிட்டு நிற்பவர்களுக்கு அரசு தனி இடம் ஒதுக்கி வீடுகட்ட உதவி செய்யவேண்டும்," என்றார்.