டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், இன்று திருச்சி வந்தடைந்தார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நூலிழையில் அவருக்கான இறுதி வாய்ப்பு பறிபோனது.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு வந்த ஆரோக்கிய ராஜீவ்க்கு தன்னார்வ அமைப்பினர், குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகனைக் கண்ட உடன் ஆரோக்கிய ராஜீவின் தாய், அவரை வாரி அனைத்து முத்தமிட்டார். பின்னர், ஆரோக்கிய ராஜீவின் நண்பர்கள் பலர் மாலை அணிவித்தும் பொன்னாடை போற்றியும் அவருக்கு வாழ்த்துக் கூறினர்.
அதன்பின்னர், ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆரோக்கிய ராஜீவ், “கோவிட் காலகட்டத்திலும் மிகச் சிறப்பாக டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தினார்கள். சிறந்த அனுபவம் கிடைத்துள்ளது. பதக்கங்களை வெல்ல நிறைய வாய்ப்பு இருந்தது. ஆனால், சின்ன சின்ன தவறுகள் காரணமாக அதை நான் இழந்து விட்டேன். கரோனோ லாக் டவுன் போன்ற பல பிரச்சனைகளால் கொஞ்சம் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. கண்டிப்பாக இனி வரும் நாட்களில் எங்களின் திறமைகளைக் காட்டுவோம்.
இந்தியாவின் சார்பில் தேர்வாகி தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாங்கள் முன்னேறி உள்ளோம். அடுத்ததாக காமன்வெல்த் மற்றும் வேர்ல்டு சேம்பியன்ஷிப் போட்டியில் எங்களது பங்களிப்பு இருக்கும் என நான் நம்புகிறேன். நமது டீம் நல்ல டீம், ஆனால் இன்னும் கொஞ்சம் கடின உழைப்பு இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். இந்தியாவில் திறமை வாய்ந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், அவர்களை அடையாளம் காட்டதான் ஆள் இல்லை. நம் ஊரில் உள்ள களம் வேறு; ஒலிம்பிக் களம் வேறு. மன ரீதியாக மிகவும் ஸ்டாராங்காக இருக்க வேண்டும். பயம் இல்லாமல் நம் திறனைக் காட்டினால் கண்டிப்பாக நாம் வெற்றி பெறலாம்” என்றார்.