அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது பரணம். இந்த கிராமத்தில் முந்திரிக்காட்டில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதில் அப்பகுதி சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மது குடிப்போர் தேடிவந்து மது வாங்கி குடித்துவிட்டு முந்திரி மரங்களின் நிழல்களில் படுத்து ஓய்வு எடுக்கிறார்கள். இந்நிலையில் அந்தக் கடை முந்திரிக்காட்டுப் பகுதியில் உள்ளதால் மதுகுடிப்போருக்கு பாதுகாப்பு இல்லையாம் அதனால் அந்த மதுக்கடையை பரணம் - பெலாக்குறிச்சி சாலை பகுதிக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த தகவலறிந்து பரணம் பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் இந்த சாலை வழியாகத்தான் பரணத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு மாணவ மாணவிகள் சென்று வரவேண்டும். அதிலும் குறிப்பாக பெலாக்குறிச்சி, வீராரக்கன், நாகல்குழி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் நடந்தும், சைக்கிள் மூலமும் காலை மாலை சென்று வருகிறார்கள். அதனால் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி சென்று படிக்கும் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். அதனால் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. ஏற்கனவே முந்திரிக்காட்டு பகுதியில் பொதுமக்களுக்குத் தொந்தரவு இல்லாத நிலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை ஏன் பள்ளி இருக்கும் பகுதிக்கு மாற்ற வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர். மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கையெழுத்திட்டு புகார் மனு தயார் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து நாம் விசாரித்த அளவில், டாஸ்மாக் கடை திறப்பு குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்து பள்ளி செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை நிறுத்த வேண்டும், மீறி கடை திறக்க முற்பட்டால் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.