கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து படித்து வந்துள்ளார். தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டதில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது. இதனால் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் பெற்றோர்கள் இடத்தில் எழுந்தது. அதையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற்கூராய்வு மற்றும் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி மனு கொடுத்தனர். இதற்கிடையில் கடந்த 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் மாபெரும் கலவரமாக மாறியது. 50 க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன.
அதேசமயம் பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18-ஆம் தேதி அன்று மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்து 11 நாள் கடந்து நிலையில் ஜூலை 23 ஆம் தேதி மாணவியின் சொந்த கிராமமான பெரிய நெசலூருக்கு சடலம் கொண்டு வரப்பட்டு, மாணவி ஸ்ரீமதிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று, அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான குழுவினர் மாணவி மரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இதற்காக ஜூலை 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதில் இரண்டாவது நாளான இன்று (27 ஆம் தேதி) உயிரிழந்த மாணவி தங்கிய பள்ளி விடுதி மற்றும் பெற்றோரைச் சந்தித்தனர். இதில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ உடன் ஆணையத்தின் இரண்டு ஆலோசகர்கள் உடன் இருந்தனர். மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து விசாரணை செய்தனர்.
இதனையடுத்து மாணவி தனியார் பள்ளி விடுதியிலும் விசாரணை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர், " நாங்கள் கவனித்ததுவரை ஆரம்பக்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதி இயக்கியது தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகமும் மாணவி மரணத்தில் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும் மாணவர்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து சரியாக ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் இருந்துள்ளனர். நாங்கள் விசாரணை செய்த அனைத்தையும் அறிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசிடம் சமர்பிக்க இருக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.