'நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாடுகளிலும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனைத் தகனம் செய்வதில் கூடவா பிரச்சனை?' என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகாசியின் கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தகனமேடை அமைக்க வேண்டும் என்ற முடிவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பால்பாண்டி என்ற நபர் தாக்கல் செய்த அந்த மனுவில் '2 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட நீர் ஆதாரமாக இருக்கும் அந்த கண்மாயில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் தகனமேடை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தகனமேடை அமைக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே அங்கு தகனமேடை அமைக்க தடைவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாடுகளிலும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்வதில் கூடவா பிரச்சனை?' என கேள்வி எழுப்பியதோடு 'அந்த இடம் நீர் நிலை என மனுதாரர் கூறியுள்ள நிலையில் இதுவரை அது நீர்நிலை என வகைப்படுத்தப்படவில்லை அதற்கு முன்பாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவே இதனை ஏற்கமுடியாது' எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.