தமிழக அரசின் 7.5% உள் இட ஒதுக்கீடு, கரோனா பரவல் ஊரடங்கு போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. பல அரசுப் பள்ளிகளில் இருந்த பல ஆசிரியர்கள் தற்போதைய கலந்தாய்வில் விரும்பிய இடங்களுக்கு சென்றுவிட்டனர். அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒனறியம் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு மனுவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், கணினி வணிகவியல் பாடப் பிரிவில் கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வு நேரம் வந்துவிட்டது. அதனால் ஆசிரியர்கள் இல்லாமல் பாடம் நடத்தப்படாமல் தேர்வு எழுத மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேநிலை தான் ஏராளமான அரசுப் பள்ளிகளில் நிலவுவதாக கூறுகின்றனர் விபரமறிந்தவர்கள்..