திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் நேற்று சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை இழந்துள்ளார் பொன்முடி.
முன்னதாக இந்த புகாரில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை பொன்முடியின் சொத்துகளை முடக்கியது. 2016 ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையால் சொத்துகள் முடக்கப்பட்டதையும் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஒன்று பொன்முடியை விடுதலை செய்ததை எதிர்த்து தனியாக ஒரு மனுவும், சொத்துகளை முடக்கியதை நீக்கம் செய்து விழுப்புரம் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை எதிர்த்தும் ஒரு மனுவும் தொடர்ந்து இருந்தது. நேற்று சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சொத்துகளை முடக்கியதை ரத்து செய்த விழுப்புரம் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை. விழுப்புரம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தவறாக இருந்தாலும் அதை மாற்ற முடியாது. தேவைப்படுமானால் லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளார்.