பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா கூட்டம் இன்று நடைபெற்றது வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, " இன்றைக்கு மிகவும் தேவையான ஒரு பயணத்தை நாம் மேற்கொண்டு நடத்தி இருக்கிறோம். இதில் இறுதி வெற்றி கிடைக்க வேண்டும் என்றே இந்த அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதில் வெற்றி பெறுவோம் என்பதில் யாரும் சந்தேகம் அடைய வேண்டாம். நம்முடைய அரசு அதனை நிச்சயம் சாத்தியப்படுத்தும்.
எந்த நுழைவுத்தேர்வும் எந்த வகையிலும் நுழையக்கூடாது என்பதே நம்முடைய எண்ணம். ஆளுநரிடம் நாம் கேட்பது ஒப்புதல் இல்லை, சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவே கேட்கிறோம். இதில் தற்போது காலதாமதம் ஆகிறது. இதனை அரசு முறையாக எதிர்கொண்டு வெற்றிபெறும். மாணவர்களின் துயரம் விரைவில் துடைக்கப்படும். இந்த அரசு மக்களுக்கானது, எனவே முடியுமா என்று எண்ணத் தேவையில்லை. முடியாத பலவற்றை நாம் முடித்துக் காண்பித்துள்ளோம். இந்த விஷயத்திலும் அதுதொடரும், அதில் சிறிதும் சந்தேகம் தேவையில்லை" என்றார்.