மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், சென்னை புளியந்தோப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும் அ.தி.மு.க.வினர், மின் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "சில நேரங்களில் மின் கட்டணம் அரசியலாக்கப்படுகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு குறைந்த மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு எச்.டி. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அக்கட்டணம் இல்லை. கடந்த காலங்களில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.