முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், தனது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், "சசிகலா மீது எந்தக் காலத்திலும் தனக்கு சந்தேகமில்லை என்றார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணத்தில், தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா என ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டேன். மக்களின் சந்தேகத்தைப் போக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும், ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அனைத்து தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நிறைவுப் பெற்றுள்ளது. விசாரணை ஆணையத்தில் அளித்த பதில்களில் சின்னமாவிற்கு எதிராக எந்தவித முரண்பாடோ, பாதகமாகவோ இல்லை" என்றார்.
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று (22/03/2022) ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.