இயந்திரமயத்தால் மாடுகளைக் கொண்டு ஏறு பூட்டி உழுவுசெய்த காலம் மாறி, டிராக்டர்களைக் கொண்டு உழவுசெய்து விவசாயம் செய்துவருகின்றனர் விவசாயிகள். ஆனால், தற்போது அசுர வேகத்தில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையால் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள். பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்த்திவரும் மத்திய அரசைக் கண்டித்து, நாகையில் வயலில் டிராக்டரைக் கயிறு கட்டி இழுத்து தங்களின் துயரநிலையை நூதன போராட்டத்தின் மூலம் வெளிபடுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை ஜெட் வேகத்தில் நூரு ரூபாயைத் தாண்டிவிட்டது. மாவட்டத்திற்கு மாவட்டம் விலையேற்றமும் தொடர்கிறது. மக்களைப் பற்றி யோசிக்காமல் தடாலடியாக விலையை வெகுவாக உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் பல்வேறுகட்ட போராட்டங்களை நடந்துவருகின்றனர்.
இந்நிலையில், நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையேற்றத்தால், வரும் காலங்களில் டிராக்டரை மனிதர்களே இழுக்கும் நிலை வந்துவிடும் என்பதை உணர்த்தும் விதமாகவும் டிராக்டரைக் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து கூறிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த காவிரி தனபாலன், "கரோனா தாக்குதலால் ஒட்டுமொத்த நாடும் பொருளாதாரத்தால் முடங்கிக் கிடந்தபோது, நாட்டு மக்களைக் காப்பாற்றியது வேளாண்மையும் விவசாயமும் மட்டுமே. ஆனால் இன்று (01.07.2021) பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக மாறிவிட்டது. ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய 40 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. சென்ற ஆண்டு 2,000 ரூபாய்க்கு வாங்கிய டீசல், இந்த ஆண்டு கடுமையான விலையேற்றத்தால் 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் விளைச்சல் செய்யப்பட்டால் 1,400 ரூபாய் கிடைக்கும். ஆனால் அதையும் தாண்டி 2,000 ரூபாய்க்கு டீசல் மட்டுமே வாங்கும் நிலையாகிவிட்டது. ஆகவே பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைப் போல பெட்ரோல் டீசல் விலையை 50 ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்காமல் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். இரு அரசுகளும் அதைச் செய்யத் தவறினால் விவசாயமும், விவசாயிகளும் சேர்ந்தே அழியும் நிலை ஏற்பட்டுவிடும். மாடுகளைப் பூட்டி உழவு செய்யப்பட்ட நிலங்களில் இயந்திரங்களுக்கு மாறியாச்சி, வருங்காலத்தில் மனிதர்களே இழுக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் துவங்கிடுச்சி, அதை அரசுக்கு உணர்த்தும்விதமாக இந்த நூதனப் போராட்டத்தை நடத்தியுள்ளோம்" என்றார்.