மாவட்ட பிரிவினை காரணமாக 9 மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த மாவட்டங்களுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அடுத்த மாதம் அந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களும் தேர்தலை சந்திக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தலைவர் பதவிக்கு 13 லட்சம் என ஏலம் விடப்பட்டு முடிவு செய்யப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
அடுத்து, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கனங்கூர் என்ற ஊரில், மினி டெம்போவில் 25 கிலோ அரிசி மூட்டைகள் நிறைய ஏற்றப்பட்டு வீட்டுக்கு ஒரு மூட்டை என வீடுவீடாகச் சென்று கொடுத்துள்ளதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் அந்தக் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த அந்த மினி டெம்போ ஓட்டுநர் வீரமுத்து, வண்டியில் மூன்று மூட்டை அரிசி இருக்கும்போதே வாகனத்தை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து மூன்று மூட்டை அரிசியுடன் மினி டெம்போவைக் கைப்பற்றிய போலீசார், அந்தக் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக வீடு வீடாக 25 கிலோ கொண்ட அரிசி மூட்டையை இலவசமாக வழங்கியதாக கூறியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொது மக்களுக்கு அரிசி விநியோகம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து மினி டெம்போ ஓட்டுநர் வீரமுத்து மீது வழக்குப் பதிவுசெய்து அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியவற்றிற்கு ஏலத் தொகை பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டும் இந்த ஊரில் ஓட்டு சீட்டு முறை தேர்தல் இருக்கும் என்றும் கூறுகின்றனர். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய இரண்டாவது நாள் ஆங்காங்கே உள்ளாட்சிகளில் பதவியைப் பிடிக்க இலவசமாகப் பொருட்கள் வழங்கும் பணி ஒருபக்கம், ஊர் ஒற்றுமையுடன் ஊராட்சிப் பதவிகளுக்கு ஏலத் தொகை பேசி முடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே துவங்கி நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.