உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- இது ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்கிறது பூவுலகின் நண்பர்கள் குழு அமைப்பு.
’’கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் சூழலுக்கு பொருந்தாத, சூழலை சீர்குலைக்கக்கூடிய விஷயங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் எல்லோரும் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற "உலகநாட்டு தலைவர்களின் மாநாட்டில்" (COP) உயர்ந்துவரும் வெப்பத்தை 1.5டிகிரி முதல் 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் ஒத்துக்கொண்டு அதுகுறித்து தங்கள் நாடுகளின் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில் எந்த அளவுகோலை ஏற்றுக்கொள்வது, 1.5 டிகிரி அல்லது 2 டிகிரி என்பதை உலகத்திலுள்ள 50 காலநிலை விஞ்ஞானிகள் பல்வேறு தரவுகளின் மூலம் ஆராய்ந்து 195 நாட்டு பிரதிநிதிகளுடன் விவாதித்து இன்றைக்கு ஐ.பி.சி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது, பூமியின் வெப்பம் 2.0 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் மிகவும் மோசமான அழிவுகள் ஏற்படும் என்றும், 1.5டிகிரிக்குள் கட்டுப்படுத்தி அளவிற்கு உயர்ந்தால் அதன் விளைவுகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. ஏற்கனவே பூமியின் வெப்பம் 1.0 டிகிரி அளவிற்கு உயர்ந்துவிட்டதாகவும், இப்போது நாம் செய்துகொண்டிருக்கக்கூடிய விஷயங்கள் தொடர்ந்தால் (மாசு ஏற்படுத்துவது தொடர்ந்தால்) 0.5டிகிரி 2030 ஆம் ஆண்டிற்குள் உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
அமெரிக்காவை, பேரழிவு உண்டாக்கும் சூறாவளிகள் தொடர்ந்து தாக்குவது, பல்வேறு நகரங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சி, கேப்டவுன் நகரில் ஏற்பட்ட வறட்சி மற்றும் ஆர்டிக் வனப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட காட்டுத்தீ இவற்றை வைத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிகழ்வுகள் ஏற்கனவே நிகழ ஆரம்பித்துவிட்டன என்பது தெளிவாகிறது. முந்தைய அறிக்கைகளிலிருந்து அதன் எச்சரிக்கையின் அளவு உயர்ந்துள்ளது, அதிகரிக்கும் வெப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் (fraction) அந்த தாக்கத்தை மோசமாக்கும் என்று எச்சரிக்கிறது இந்த அறிக்கை. சுமார் 6,000க்கும் மேற்பட்ட ஆய்வுத்தரவுகளை வைத்து இந்த 0.5டிகிரி உயர்வு ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடிகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
1.5 டிகிரி வெப்ப உயர்விற்கும், 2டிகிரி வெப்ப உயர்விற்கும் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்:
1. தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படப்போகும் மக்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் 1.5 டிகிரிக்கும் 2 டிகிரி உயர்வுக்கும்
2. வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படும் உணவுப்பஞ்சம் சில கோடி மக்களை குறைவாக பாதிக்கும் வெப்பம் 1.5 டிகிரி அளவிற்கு மட்டுமே உயர்ந்தால்
3. அதிகரித்து வரும் வெப்பத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லாமல் கொஞ்சம் குறைவாக இருக்கும்
4. பல தாவரங்கள் மற்றும் உணவு பயிர்களின் மரகந்த சேர்க்கைக்கு காரணமாக இருக்கும் பூச்சிகள் அழிந்துபோவது 50% குறைவாக இருக்கும் வெப்பம் 1.5 அளவிற்கு மட்டுமே உயர்ந்தால்
5. வெப்பம் 2டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 99% கடலிலுள்ள பவளப்பாறைகள் அழிந்துவிடும் என்றும், 10% காப்பாற்றப்படும் 1.5 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் என்பதையும் வெளிப்படுகிறது இந்த அறிக்கை.
6. கடல்மட்டம் உயர்வதால் பாதிக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறையும் 1.5 டிகிரி அளவிற்கு வெப்பம் உயர்வதால்
7. காலநிலை மாற்றத்தால் கடலின் அமிலத்தன்மை ஏற்கனவே அதிகரித்துள்ளது அதனால் கடலின் ஆக்ஸிஜன் அளவு குறைத்து வருகிறது, இந்த நிலையில் 2டிகிரி அளவிற்கு வெப்பம் உயர்ந்தால் 30 லட்சம் டன் அளவிற்கு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 1.5டிகிரி அளவிற்கு உயர்ந்தால் பாதிக்கப்படும் அளவு பாதி குறையும்.
8. ஆர்டிக்கடல், நிலத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக வெப்பமாகி வருகிறது, 2டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 10வருடத்திற்கு ஒரு முறை "பனி இல்லா" ஆர்டிக் இருக்கும் என்றும், அதுவே 1.5 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 100 வருடத்திற்கு ஒருமுறைதான் "பனி இல்லா ஆர்டிக் கடல்" ஏற்படும்.
மேற்சொன்னவை குறிப்பிட்ட சில விஷயங்கள்தான்.
பூமியின் சராசரி வெப்பம் 1.5 டிகிரி அளவிற்கு மட்டும் உயர பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்: அவற்றுள் சில
1. 2050 ஆம் ஆண்டிற்குள் ஒரு மெகாவாட் கூட அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யக்கூடாது, குறைந்தபட்சம் 75% வரை புதிப்பிக்கக்கூடிய ஆற்றல்கள் பயன்படுத்தப்படவேண்டும். வெளிவரும் கார்பனை சேமித்து வைக்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் தான் இயற்கை வாயுக்களால் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
2. 2032 ஆம் ஆண்டிற்குள் மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைட் அளவு பாதியாக குறையவேண்டும், 2050 ஆண்டிற்குள் அது பூஜ்யமாக இருக்கவேண்டும்.
3. காடுகள் இயற்கையாய் மனிதர்கள் வெளியிடக்கூடிய கார்பனை உள்வாங்கும் ஆற்றல் கொண்டவை, அதனால் காடுகளின் அளவுகளை பல மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் அதிகரிக்க வேண்டும்.
இந்தியா எவ்வாறு பாதிக்கப்படும்? என்ன செய்யவேண்டும்?
காலநிலை மாற்றம் ஏற்கனவே இந்தியாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சென்னை கேரளா, மும்பையில் ஏற்பட்ட வெள்ளம் நமக்கு அதன் தாக்கத்தை காண்பிக்கின்றன. நம்முடைய உள்நாட்டு உற்பத்தியில் 1.5% காலநிலை நிகழ்வுகளால் இழப்பு ஏற்படுகிறது. விவசாயத்தை அதிகமாக நம்பி இருக்கும் வெப்பமண்டல நாடுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
வெப்பம் 2டிகிரி அளவிற்கு உயர்ந்தால், இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகள் அதிகரிக்கும், கொல்கத்தா போன்ற கடற்கரை நகரங்கள் மிக அதிகமான வெப்பத்தை சந்திக்கும், வெப்ப சலனங்களால் ஏற்படும் அதிதீவிர மழைபொழிவு அதிகரிக்கும், புயல்களின் தாக்கம் அதிகரிக்கும்.
வெப்பம் உயர்வதால் உணவு உற்பத்தி பாதிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியாகும் உணவின் ஊட்டச்சத்து குறைவாக இருக்கும். குறிப்பாக சோளம், அரிசி உற்பத்தி பாதிக்கப்படும். கடந்த ஒவ்வொரு ஆண்டும் உணவு உற்பத்தியின் மகசூல் 4 முதல் 9 சதவீதம் வரை குறைந்துவருகிறது. கங்கை-பிரம்மபுத்ரா டெல்டா பகுதிகளில் தண்ணீரின் அளவு மற்றும் தரம் குறையும். விவசாயம் பொய்த்து, விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்தும், கடல்மட்டம் உயர்வதால் கடலோரம் வாழக்கூடிய மீனவர்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதால், இவர்கள் அனைவரும் காலநிலை அகதிகளாக இடம்பெயர்க்கூடிய நிலை ஏற்படும். காலநிலை அகதிகள் நகரங்களை நோக்கி இடம்பெயருவதால் நகரங்களில் அழுத்தம் அதிகமாகும்.
வெப்பம் அதிகரிப்பதால் மலேரியா டெங்கு போன்ற "திசையன் நோய்கள்" (vector borne diseases), மிக அதிகமாகும். தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் பலவும் அழிவை சந்திக்கும்.
வெப்பத்தை 2 டிகிரி அளவிற்கு உயர அனுமதித்தால் வாழ்வதற்கு தகுதியற்ற நிலப்பரப்பாக மாறிவிடும், குறிப்பாக விளிம்புநிலையில் வாழக்கூடிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்தியா காலநிலை மாற்றத்தை, உயரும் வெப்பத்தை கட்டுப்படுத்த பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்; காலம் தாழ்த்த இனியும் காலமில்லை. உலகத்தில் அதிகமாக மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாம் இடம். இனியும் நாங்கள் வளர்ந்துவரக்கூடிய நாடு அதனால் மேலும் மாசுபடுத்துவோம் என்பதெல்லாம் பழங்கதை. இந்தியா மனிதர்கள் வாழ்வதற்குரிய நிலப்பரப்பாக இருக்க வேண்டுமென்றால் ஏற்கனவே அறிவித்த நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும்.
1. இந்தியாவிற்கென தனி காலநிலைச் சட்டம் இயற்றப்படவேண்டும். இந்திய அரசு கொண்டுவரக்கூடிய திட்டங்கள் அனைத்திலும் "காலநிலை மாற்றம்" மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும்.
2. புதிதாக அனுமதி கொடுக்கப்பட்ட அனல் மின் திட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் சூழலை மாசுபடுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் கைவிடவேண்டும்.
3. ஏற்கனவே உற்பத்தி செய்துவரும் அனல் மின் திட்டங்களை படிப்படியாக குறைத்து அடுத்த 20 ஆண்டுகளுக்குள் முழுவதும் உற்பத்தியை நிறுத்த வேண்டும்.
4. மாசு ஏற்படுத்தக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் மாசு ஏற்படுத்தாவண்ணம் மாற்ற வேண்டும் அல்லது மூடிவிட வேண்டும்
5. இந்தியாவிற்கென தனி "காலநிலை மாதிரிகளை" உருவாக்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும், இங்கே நிகழப்போகும் காலநிலை நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும்.
6. பொதுப்போக்குவரத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி, புகை கக்கும் தனிநபர் வாகனங்கள் முழுவதுமாக தடைசெய்யப்படவேண்டும். தனிநபர் வாகனங்கள் இருந்தால் அவை சூரிய சக்தி மின்சாரத்தால் இயங்கக்கூடியதாக இருக்கவேண்டும்
7. உணவு தானியங்கள் காலநிலை நிலை மாற்றத்தை தாங்கக்கூடிய வகையில் தேர்வுசெய்யப்பட்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
மேற்சொன்னவை சிலவிஷயங்கள் மட்டுமே, ஒட்டுமொத்தமாக நாம் கடந்த 150 ஆண்டுகளாக செய்துவந்த அனைத்தையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அதுமட்டுமே இந்த உலகத்தில் மானுடம் பிழைத்துவாழ வழிவகை செய்யும்.’’